புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கினர்.
இதன் பின்னர் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: கடந்த காலத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, அதனால் அவர் முதலமைச்சரே ஆக முடியாது என்றெல்லாம் கூறினார்கள். அதை தவிடு பொடியாக்கி முதலமைச்சரானவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதேபோல் மு.க ஸ்டாலினை தொடர்ந்து, நிச்சயமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவார், அதில் எந்தவிதமான சந்தேகமும் எள்ளளவு கூட கிடையாது.
திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர் எங்கே இருக்கின்றது என்பது அமித்ஷாவுக்கு தெரியாது. திமுகவின் வேர் அவ்வளவு தூரம் ஆழமாக பாய்ந்து இருக்கின்ற வேர். திமுகவின் வேரை அமித்சாவல் தேடி கண்டுபிடிக்கவே முடியாது.
இதையும் படிங்க: வரும் 26ம் தேதி.. முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு..!!
பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் மீது என்ன நடந்தது அமித்ஷா குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பொழுது என்ன நடந்தது எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு இறுதியான தீர்ப்பு நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறவர்களே தவிர இவர்கள் கொண்டுவரும் கருப்பு சட்டத்தை நம்புகிறவர்கள் இல்லை. நிச்சயமாக அந்த சட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடையாது. தப்பி தவறி நிறைவேறும் நாளும் நீதிமன்றத்தில் பல விஷயங்களை வைத்து அந்த சட்டத்தை எங்களால் முறியடித்து காண்பிக்க எங்களின் வழக்கறிஞர்களால் முடியும்.
இன்னும் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை அது குழுவுக்கு தான் சென்றுள்ளது. சட்டம் வந்த பிறகு அதைப்பற்றி பேசுவோம். அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும். ஒருவேளை அவர்களே இந்த திட்டத்தை கைவிடலாம். அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி இருக்கலாம். அவர்கள் யாரை பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் தான் தெரியும்.
நாங்கள் ஆட்சியில் இருக்கின்றோம். எங்களின் கனவு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அந்தக் கனவுகள் சுக்குநூறாக போகாது நிறைவேறும். எங்களுக்கு தேர்தலை பற்றி பயம் கிடையாது. நாங்கள் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகின்றோம். அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியில் இருப்பவர்களை ஏதேனும் ஒரு வழியில் போய் காரணம் சொல்லி வழக்குகளில் சிக்க வைத்து அதன் மூலம் அவர்கள் பதவியைப் பறித்து ஆட்சிக்கு வர முடியுமா என்று அவர்கள் தான் பகல் கனவு காண்கிறார்கள். நாங்கள் பகல் கனவு காணவில்லை இரவு கனவும் காணவில்லை. காண வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. எங்களுடைய தலைவர் மு க ஸ்டாலின் திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திப்பார்.
39 சதவீதம் வாக்குகளை பெற்று அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அமைச்சராக கூறியிருக்கிறார் தமிழ்நாட்டின் நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு தமிழ்நாட்டின் நிலவரம் வேறு என்பது 2026 தேர்தல் மீண்டும் அமித்ஷாவுக்கு பாடம் புகட்டும்.
வாக்குறுதிகள் எல்லாமே நிறைவேற்றப்பட்டு தான் இருக்கின்றது. பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டங்களும் நிறைவேற்றிய பிறகு அதை காதில் விழவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. மக்களுக்கு தெரியும் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்ற ஒரே அரசு இந்தியாவிலேயே எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சரின் அரசுதான்.
இயற்கை வளங்களில் எங்கே ஊழல் நடந்தது என்று ஒன்றிய அரசே கூறட்டும். தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருந்தால் அது வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் கிடையாது. வெளியே போயிருந்தால் அதற்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பே தவிர தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல.
ஊழல் நடந்திருக்கிறதா என்பது வழக்கு விசாரணையில் தான் தெரியும். மொத்தத்தில் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யும் பொழுது மொத்தத்தில் அந்த வழக்கே தள்ளுபடி ஆகிறது. நீதிமன்றத்தில் தான் ஒருத்தர் தப்பு செய்திருக்கிறாரா? இல்லையா? என்பதை நிரூபிக்க முடியும். வழக்கு போட்ட உடனே குற்றவாளி ஆகிவிட முடியாது. நீதிமன்றத்தில் சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் குற்றவாளி.
அதிமுகவினர் மீது நாங்கள் வலுவான ஆதாரத்தோடு தான் நாங்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளோம். நீதிமன்றத்தில் அந்த வாதங்களை எடுத்துரைப்போம். குற்றவாளி என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்குவோம்.
எந்தெந்த வழக்குகள் விசாரணைக்கு வருகிறது வரவில்லை என்று உங்களுக்கெல்லாம் தெரியாது. நீதிமன்றத்திற்கு சென்று பார்த்தல் அவர்கள் குடும்பத்தினரோடு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்து செல்வதை காணலாம் ஆனால் இது போன்ற விஷயங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதில்லை.
நாங்கள் தான் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதை கூறி விட்டோமே அவர்கள் யார் முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டால் எங்களுக்கு என்ன நாங்கள்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம். அவர்கள் யாரை சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட வழக்கு.. கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!!