தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் நோக்கி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல் இந்த அவசர முடிவு எதற்காக எடுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது அத்தனை எளிதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

ஆனால் தேர்தலின் போது பரந்தூரை தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய செயல்முறையையும் மீண்டும் முதலில் இருந்து தொடங்க முடிவு செய்திருப்பது நேர விரயம், பண விரயம் மற்றும் வளங்களின் விரயம் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை போடுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது பரந்தூர் விமான நிலையத் திட்டம்!! பெங்களூரு, ஹைதராபாத்தில் விஜய்க்கு வரவேற்பு!!
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது தெரியுமா என்றும், இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது என்றும் அவர் வினவியுள்ளார்.எனவே ஆரம்பம் முதலே தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா என்று கேட்டு, அதற்கு பதிலளியுங்கள் ஜோசப் விஜய் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!