புதுடெல்லி, அக்டோபர் 29: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) தளத்தின் 54வது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ரயில் நிலையங்களை பல்முனை போக்குவரத்து மையங்களாக விரைவாக மேம்படுத்த வேண்டும்.
மருந்து உற்பத்தியில் சுயசார்பை ஊக்குவிக்க வேண்டும். கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும். எங்களது நோக்கம் தெளிவானது. திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். திட்டங்கள் மக்களுக்கு நீண்ட கால நன்மைகளையும், பலன்களையும் வழங்க வேண்டும்.”
இதையும் படிங்க: 80 வயதில் வரலாற்று வெற்றி!! பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக வாகை சூடிய லூலாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!
சேவா தீர்த்தத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரயில்வே தொடர்பான திட்டங்கள், பிஎம் ஏக்தா மால்கள் மற்றும் பல்க் ட்ரக் பார்க்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ரயில் நிலையங்களை மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்து வசதிகளுடன் இணைத்து பல்முனை மையங்களாக மாற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
மருந்துத் துறையில் சுயசார்பை அதிகரிக்க ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்க் ட்ரக் பார்க்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உள்நாட்டில் செயலில் உள்ள மருந்துப் பொருட்கள் (API) உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பிஎம் ஏக்தா மால்கள் உள்ளூர் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டது. தலைமைச் செயலாளர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் மாதம் ஒருமுறை திட்டங்களை ஆய்வு செய்து இடைவெளிகளைக் கண்டறிந்து பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.
திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை விரைவாக நீக்கவும், மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் திட்டங்களின் சரியான நேரத்தில் நிறைவேற்றம் மற்றும் மக்களுக்கு நீடித்த பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நடைபெற்றது.
இதையும் படிங்க: “முதல்வர் விஜய் - மோடி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்!” - நயினார் நாகேந்திரன் அதிரடி!