தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடந்தது என்றும், கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் இதுபற்றி பேசினார். விஜய்யை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவர், "சந்தித்தேன். அவ்வளவுதான் சொல்வேன்" என்று சுருக்கமாக பதிலளித்தார். மேலும், "ஒரு இரண்டு பேர் சந்திக்கக் கூடாதா? டில்லியில் நிறைய தலைவர்களைச் சந்திப்பேன். தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கேள்வி?" என்று கேட்டார்.
தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தான் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது குறித்து பேசிய அவர், "நான் உத்தரப் பிரதேசத்துடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை. ரிசர்வ் வங்கி தரவுகளை மட்டுமே குறிப்பிட்டேன். சர்ச்சை என்று எதுவும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: விஜயை சந்தித்ததால் திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை! சேம் சைடு கோல் போடும் பிரவீன்!
தவெகவின் வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், "விஜய் கூட்டங்களுக்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். அது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் அவரை நடிகராக மட்டும் பார்க்க வரவில்லை, அரசியல்வாதியாகப் பார்க்க வருகின்றனர். அவர் தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்" என்று புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து பேசிய பிரவீன், "தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன: அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. இது கட்சியின் எதிர்காலத்துக்காகவும் நலனுக்காகவும் வைக்கப்படும் கோரிக்கை" என்றார். கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமடைந்து வருவதால், இப்போது பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்பதால் தொண்டர்கள் கோரிக்கை வைப்பது இயல்பு என்றும் கூறினார். "ஆனால் இறுதியில் கூட்டணி யாருடன் என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும்" என்று தெளிவாகக் கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தப் பேட்டி தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் வலுப்பெற்று வரும் நிலையில், இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய்!! காங்கிரஸ் நிர்வாகி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?!