தமிழக அரசு தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை விமர்சித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “வளரும் போதே பாலூட்ட வேண்டும்; வளர்ந்த பிறகு பாலூட்டத் தேவையில்லை” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன், தமிழக அரசின் லேப்டாப் திட்டம் குறித்துக் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வழங்க வேண்டியதை இப்போது வழங்குவது காலங்கடந்த செயல். எப்போது மாணவர்களுக்கு அது தேவையோ, அப்போது கிடைத்திருக்க வேண்டும்” என்று அவர் சாடினார். மேலும், தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், படத்தைத் தடுப்பது ஆட்சியாளர்களுக்கே பாதகமாக முடியும் என எச்சரித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துத் தனது ‘கழுகுப் பார்வை’ விமர்சனங்களை முன்வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு குறித்துக் கேட்கப்பட்ட போது, “வளரும் போதே பாலூட்ட வேண்டும்; வளர்ந்த பிறகு பாலூட்டத் தேவையில்லை” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, இத்திட்டம் மாணவர்களுக்குத் தேவைப்பட்ட காலத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். கல்வியாளர்களுக்குத் தெரியும் அந்த நேரத்தில் மாணவர்களின் நிலை என்னவாக இருந்தது என்று கூறி, அரசின் இந்தத் தாமதமான நடவடிக்கையைக் கிண்டல் செய்தார்.
இதையும் படிங்க: "படிங்க.. படிங்க.. படிங்க!" மாணவர்கள பார்த்தா எனக்குள்ள ஒரு வைப் வருது! CM-ன் நெகிழ்ச்சி பேச்சு!
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” எனப் பொடி வைத்துப் பேசினார். தமிழ்நாட்டில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும், படத்திற்குத் தடை விதிப்பது அரசுக்கு நல்லதல்ல என்றும் அவர் ‘சத்தமாக’த் தெரிவித்தார். அத்தகைய சூழல் ஏற்பட்டால் அது வேதனைக்குரியதாக அமையும் என்றும், திரைப்படத்தைத் தடுப்பது ஆட்சியாளர்களுக்குப் பாதகமாக முடியும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுமா? என்ற கேள்விக்கு, “அது இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை” என்று பதிலளித்த அவர், ஒரு படைப்பு சுதந்திரமாக வெளிவருவதைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றார். முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், தற்போது தவெக-வில் இணைந்து லேப்டாப் திட்டத்தை விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் திரைப்பட விவகாரத்தில் அவர் நேரடியாகத் தமிழக அரசைச் சுட்டிக்காட்டியுள்ளது தவெக - திமுக இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: "ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிரடி!" தமிழகத்தில் புதிய ஆலை தொடங்க வேதாந்தாவிற்கு அனுமதி?