சென்னை: சென்னையின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் தரமணியில் புதிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ஆரம்பகட்டமாக 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
சென்னையில் புதிதாக உருவாகி வரும் ஓஎம்ஆர் குளோபல் கேபபிலிட்டி சென்டர் எனப்படும் ஜிசிசி வழித்தடத்தில் இந்த புதிய மையம் அமைய உள்ளது. குறிப்பாக தரமணியில் உள்ள டிஎல்எப் டவுன்டவுன் வளாகத்தில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் திறன் மையம் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ரூ.1.50 டிரில்லியன் பொருளாதார இலக்கு! தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கும் 20 துறைகள்!
உலக அளவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய பணிகளை ஒருங்கிணைக்க இந்தியாவில் குளோபல் கேபபிலிட்டி சென்டர்களை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. சென்னை ஏற்கனவே இதுபோன்ற பல நிறுவனங்களின் முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில், வால்கிரீன்ஸ் நிறுவனம் சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
இதனால் சென்னையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன சேவை துறைகளில் வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தரமணி மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் உலகளாவிய நிறுவனங்களின் வருகை அதிகரிப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு சூழலும் மேலும் வளர வாய்ப்புள்ளது.
வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் புதிய மையம் எந்தெந்த துறைகளில் பணியாற்றும், கூடுதல் பணியிடங்கள் எப்போது உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடுத்தகட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சொந்த வீடு கனவு நனவாகும் நேரம்! தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு அடிக்கப் போகும் யோகம்! ரூ.2.50 லட்சம் மானியம்!