மதுரையில் 19 வயது இளம் பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் அதே பகுதியை சேர்ந் தீபன்ராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. அதன்படி தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார். காதலனின் பேச்சை கேட்டு அந்த இளம் பெண்ணும் இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதலனை பார்க்கச் சென்றுள்ளார். தீபன்ராஜ் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகில் உள்ள சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து 2 பேரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பிறகு மூவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. காதலிப்பதாக கூறி இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட தீபன்ராஜ், மதன், சுகுமாரன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை நம்பி தனிமையில் சந்திக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.