திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது வடமாநில சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது... தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அப்பகுதியில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீர்செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள், தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர். 3 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!