புதுடெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47-வது கூட்டத்தில், தமிழகத்தின் விவசாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி மாதத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு வலுவாக வாதிட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாகக் கலந்துகொண்டு தமிழகத்தின் ‘பீல்டு’ நிலவரத்தை விளக்கினர். குறிப்பாக, அண்மையில் வீசிய 'டித்வா' புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மறுநடவு (Replanting) பணிகளுக்குக் காவிரி நீர் மிகவும் அத்தியாவசியமானது என்பதை அவர்கள் ஆணையத்தில் ‘சத்தமாக’ப் பதிவு செய்தனர்.
இன்றைய கூட்டத்தின் போது மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு குறித்துத் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன்று (ஜனவரி 6) நிலவரப்படி மேட்டூர் அணையில் 65.360 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதாகவும், விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்காக வினாடிக்கு 8,400 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் தமிழக உறுப்பினர் தெரிவித்தார். கடந்த நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளைச் சரிசெய்யத் தற்போது தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "மழை விடாது போலயே!" வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட்!
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஜனவரி மாதத்திற்குத் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2.76 டி.எம்.சி நீரைக் கர்நாடக அரசு பில்லிகுண்டுலுவில் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழகம் தரப்பில் பிடிவாதமாக வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதைக் கணக்கில் கொண்டு, இந்த மாதத்திற்கான நீர் பங்கீட்டை எவ்விதத் தடையுமின்றி வழங்க ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த நீர் பங்கீடு மிக முக்கியமானது என்பதால், ஆணையத்தின் முடிவை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மழை அப்டேட்! தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்! சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை மட்டுமே! - வெதர் மேன் தகவல்!