புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற 'தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், "இந்துக்கள் ஊர்வலம் சென்றால் தடை விதிக்கப்படுகிறது; திருவுருவங்களை கரைக்கக் கூடத் தடைகள் உள்ளன" என்று விமர்சித்தார். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசியவர்களின் கைகளில் ஆட்சி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற செயல்கள் மூலம் அரசியல் சட்டத்தின் மாண்புகள் குலைக்கப்படுவதாகச் சாடினார். மேலும், 2024-ல் தொடங்கிய பாஜக-வின் மாபெரும் வெற்றிப் பயணம், 2026-ல் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மையுடன் தொடரும் எனத் தீர்க்கமாகக் கூறினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்திற்குச் செய்துள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பாஜக-வின் அரசியல் வெற்றிகள் குறித்துப் பல புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டார். “கடந்த 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்குக் கிடைத்தது வெறும் 1.53 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், கடந்த 2014 முதல் 2024 வரையிலான பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் பட்டியலிட்டார்.
பாஜக-வின் தேர்தல் வெற்றிகளை வரிசைப்படுத்திய அவர், “2024-ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றார்; ஒரிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்தது; ஆந்திராவிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. 2025-ல் டெல்லியிலும், ஹரியானாவிலும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது; பீகாரில் இந்தியா கூட்டணி மண்ணைக் கவ்வியது. இதேபோல் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்” என அறைகூவல் விடுத்தார்.
இதையும் படிங்க: "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்
“இங்கு கூடியுள்ள தொண்டர்கள் ஒரு உறுதியை ஏற்றுவிட்டுச் செல்ல வேண்டும்; வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கத் தயாரா?” என அமித்ஷா கேட்டபோது, அங்கிருந்தவர்கள் கைகளைத் தூக்கி ஆரவாரம் செய்தனர். “இந்தக் குரல் புனித ஜார்ஜ் கோட்டையை எட்ட வேண்டும்” என ஆவேசமாகப் பேசிய அவர், ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ என முழக்கங்களை எழுப்பித் தனது உரையை நிறைவு செய்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் 3வது முறை! முன்னாள் அமைச்சர் வீட்டிற்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!! போலீஸ் குவிப்பு!