தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேக்கம்பட்டி திறந்தவெளிச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றது மாநிலத்தின் பாதுகாப்பு நிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி திறந்தவெளிச் சிறையில் கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வேல்முருகன் கூறினார்.
தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் சூழலில், காவல்துறையின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சிறையிலேயே 17 கைதிகள் தப்பியிருப்பது ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி காவலர்களை அறைக்குள் வரவழைத்து தாக்கிவிட்டு 17 பேர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 13 பேர் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையிலேயே பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டு கைதிகள் தப்பிச் செல்லும் சூழல் நிலவும்போது, இதை ஒரு சாதாரண சம்பவமாகக் கடந்து சென்றுவிட முடியாது என அவர் வலியுறுத்தினார்.சிறைக்குள் இருக்கும் கைதிகளையே முறையாகக் கண்காணிக்க முடியாத நிர்வாகம், சிறைக்கு வெளியே இருக்கும் பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்ற கேள்வியை அவர் எழுப்பினார். காவலர்களின் கண்காணிப்பில் இருந்த 17 பேர் ஒரே நேரத்தில் தப்பும் வரை பாதுகாப்பு அமைப்புகளும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருந்தனர் என்றும், காவலர்களையே தாக்கிவிட்டு கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சிறை வளாகத்தின் பாதுகாப்பு பலவீனமாக இருந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சம்பவம் நடந்த பிறகு தனிப்படைகளை அமைத்துத் தேடும் அரசு, சம்பவத்திற்கு முன்பே உரிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் அவர் வினவினார்.
இதையும் படிங்க: PRISON BREAK- ம் தொடங்கியாச்சு..! ஒன்றுக்கும் உதவாத அரசு.! ஸ்டாலின் விமர்சனம்.!!
சிறைக்குள் நடந்த இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்பு என்றும், அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் அரசு வெளிப்படையாக நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேட்டார். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது வெற்று அறிவிப்புகளிலும் ஆய்வுக் கூட்டங்களிலும் புகைப்படங்களிலும் ரோட் ஷோவிலும் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அது களத்தில் உறுதியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மக்கள் பாதுகாப்பான உண்மையான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள். ரீல்ஸ் நிர்வாகத்தை அல்ல. களச் செயல்பாட்டை எதிர்பார்க்கிறார்கள். திரைக் காட்சிப்படுத்தலை அல்ல என அவர் கூறினார்.தப்பியோடியுள்ள மீதமுள்ள 13 கைதிகளையும் விரைந்து கைது செய்து பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க போர்க்கால அடிப்படையில் தனிப்படைகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் கோரினார். சிறைக்குள் நடந்த இந்த இமாலய பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்போ, அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு வெளிப்படையான, கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!