கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. “மக்கள் தொகை 20 லட்சத்துக்கு கீழ் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அனுமதி இல்லை” என்ற 2017 விதியை காரணம் காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழக அரசு தயாரித்த திட்டப்படி, மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 32 கி.மீ. தொலைவுக்கும், கோவையில் அவினாசி சாலை – கருமத்தம்பட்டி மற்றும் உக்கடம் – வலியம்பாளையம் பிரிவு வரை மொத்தம் 39 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. மதுரை திட்டத்துக்கு 11,360 கோடி ரூபாயும், கோவை திட்டத்துக்கு 10,740 கோடி ரூபாயும் செலவிட திட்டமிடப்பட்டது.
2024 பிப்ரவரியில் முதல் அறிக்கையை சமர்ப்பித்த தமிழக அரசு, மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்களுடன் 10 மாதங்களுக்கு முன்பு திருத்திய அறிக்கையை அனுப்பியது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) அதிகாரிகள் கூட இரு நகரங்களிலும் ஆய்வு மேற்கொண்டு முடித்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நரகாசுரனா? வன்மம், வன்முறையை வெளிப்படுத்தும் திமுக.. நயினார் ஆவேசம்!
ஆனால் திடீரென வந்த மத்திய அரசின் கடிதத்தில், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் தான் மக்கள் தொகை. எனவே 2017 மெட்ரோ கொள்கையின்படி இங்கு மெட்ரோ ரயில் அனுமதி கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக, தனி பாதை பேருந்து முறை (BRTS) அல்லது மெட்ரோ-லைட், மெட்ரோ-நியோ போன்ற மலிவு விலை போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த முடிவு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதே 2017 கொள்கையை மீறி, உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் (மக்கள் தொகை 2011-ல் 15.82 லட்சம்), ஆக்ரா (15.85 லட்சம்), மஹாராஷ்டிராவில் நாக்பூர் (சுமார் 18 லட்சம்) ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் “தமிழகத்துக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுகிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டோம். திடீரென அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏமாற்றமளிக்கிறது. இப்போது மாநில அரசு மீண்டும் பேச்சு நடத்தி அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்றார்.
தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை, மதுரை மக்கள் பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் கேட்டு வரும் நிலையில், இந்த பின்னடை தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: AI- ஐ நம்பாதீங்க... மவுசு கொரஞ்சா அவ்ளோ தான்..! சுந்தர் பிச்சை எச்சரிக்கை...!