சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையிலான அணி, அதிமுக-பாஜக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனி அணிகளாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
இதர கட்சிகளான தேமுதிக, அமமுக, பாமக, ஓ.பி.எஸ் தரப்பு ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி, தவெகவுடன் கூட்டணி குறித்து சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளும் பங்கேற்ற நிலையில், விஜய் பற்றி பேசிய போது கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது சினிமா இல்ல! அரசியல்! தவெக தலைவர் விஜயை சீண்டும் நயினார் நாகேந்திரன்!
திருச்சி வேலுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.

சில இடங்களில் வேட்பாளர்களை தோற்கடிக்கவும் திமுக முயன்றது. இதனால் தொண்டர்களிடையே குமுறல் உள்ளது. நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை சரியான முடிவு எடுக்கும். தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.
திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டுமா அல்லது தவெகவுடன் இணைய வேண்டுமா என்பது குறித்து காங்கிரஸ் உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அடிமட்ட தொண்டர்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிகிறது. இத்தகைய கருத்துகள் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக கட்சி தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கூட்டணி குறித்து வரும் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய நகர்வுகள் 2026 தேர்தலை நான்கு அல்லது ஐந்து முனை போட்டியாக மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? மதுரையில் யார் கொடி பறக்கும்? நிர்வாகிகளுக்கு தூண்டில் போடும் வேலை ஜரூர்!