தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்டோபர் 24) உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, விரைவாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள மேல் காற்று சுழற்சி காரணமாக இந்தத் தாழ்வு உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்... நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... சுழட்டி அடிக்க போகுது...!
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும்.
வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 ஆம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல், தமிழகத்துக்கு அருகில் வந்து நகருமா? அல்லது ஆந்திராவுக்கு சென்றுவிடுமா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வராமல் அப்படியே திறந்த கடல் பகுதி வழியாக ஆந்திரா நோக்கி சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பலத்த மழை இருக்காது. அதற்கு மாறாக மிதமான மழையே இருக்கும். இந்த புயலால் வடமாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!