சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு பகுதி. இது நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகவும், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளதாலும் சிறப்பு வாய்ந்தது. 2013-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதி, புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல வனவிலங்குகளின் வாழிடமாக திகழ்கிறது.
புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த சரணாலயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால், இந்த புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குள் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா தங்குமிடங்கள் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. இந்த பிரச்சினை 2022-ஆம் ஆண்டு முதல் பொது நல வழக்குகள் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டவிரோத ரிசார்ட்டுகள் வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகரிக்கும் மனித நடமாட்டம், வாகன போக்குவரத்து, ஒலி மாசு, குப்பை கொட்டுதல் போன்றவை விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை பாதிக்கின்றன. குறிப்பாக, புலிகள் மற்றும் யானைகளுக்கு அழுத்தம் அதிகரிப்பதால், மனித-விலங்கு மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: “மாஸ்டரின் பிளாஸ்டர்”... விஜய்யின் ‘ஈரோடு’சபதம்.. 30 நிமிட பேச்சில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?
இதனிடையே, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: உங்கள மாதிரி “அப்படி” பேசணுமா? யாரு ஓசி… வாயில் வடை சுடும் திமுகவா நாங்க? கேள்விகளால் துளைத்த விஜய்…!