234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்கவும், உதவியாளர்களை நியமித்துச் சம்பளம் கொடுக்கவும் நிதி இருக்கும் பொழுது, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய அரசுக்கு நிதி இல்லையா, அல்லது மனம் இல்லையா என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி. இளங்கீரன் தமிழக அரசுக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு மட்டும் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி ஏமாற்றி வருவதாகச் சாடியுள்ளார். எதைக் கேட்டாலும் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று கூறுகிறீர்கள்; முதலமைச்சரின் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், ஊரார் வீட்டு நெய்யில் உங்களுக்கு ஸ்வீட்டா முதல்வரே? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், விவசாயம் செய்வதற்குப் போதிய பாசன நீரும் இல்லாத அவல நிலை நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நீர்வளத்தைப் பெருக்க ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் ஓராண்டிற்கு 20 தடுப்பணைகளைக் கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும், மீன்பிடித் தொழில் பெருகி லட்சக்கணக்கான விவசாயிகளின் மற்றும் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் யோசனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை கோரிய வழக்கு: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம்!
மாற்றம் மாற்றம் என்று மேடைகளில் முழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சரின் செயல்பாடு மக்களுக்கு எந்த மாற்றத்தையும் தரவில்லை என்றும், இது உண்மையான மாற்றம் அல்ல, தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருத்த ஏமாற்றமே என்றும் கே.வி. இளங்கீரன் தனது அறிக்கையில் திட்டவட்டமாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!