2025ஆம் ஆண்டு அக்டோபரில் வீரமணி மீது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாருடன் சிறுமி தொடர்பான வீடியோ ஆதாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை முடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த முடிப்பு அறிக்கையை ஏற்காமல், மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற மறுவிசாரணையில், வீடியோவில் இருந்ததாகக் கூறப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
மறுவிசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
மேலும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கணேசனும் செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் வீரமணி மற்றும் சிறுமி தொடர்பான வீடியோ இருந்ததாகவும், அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனால், தற்போதைய முக்கிய வழக்கில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரமணி தொடர்பான வழக்குகளின் விசாரணைக்காக தமிழக காவல்துறை நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் உள்ள ஆதாரங்களை பெறுவதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் தொடர்பு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த எண்ணுக்கு மூன்று புகார்கள் வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலீசாரிடம் வீரமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், 'குற்றத்தை மறைக்க, பணமாக வாங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், போலீஸ் அதிகாரிகள், என்னிடம் இருந்து பரிசாக தங்க கட்டிகள் வாங்கினர். இதை, இடைத்தரகராக செயல்பட்ட, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மகன் பிரகாஷ் வாங்கி கொடுத்தார்' என, தெரிவித்துள்ளார். இந்த தகவல் போலீஸ் வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: 11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்...!