தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் களப் பணிகளையும் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளதாகவும், அதனால் மழைக்கால இடர்பாடுகள் உடனுக்குடன் சீர்செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பொதுமக்களுக்குப் பரவக்கூடிய காய்ச்சல், சளி, டெங்கு மற்றும் நீர் மூலம் பரவும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை சார்பில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 1,000-க்கும் அதிகமான இடங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் உரிய மருந்து மாத்திரைகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை..!! தடையற்ற மருத்துவ சேவை..! முதல்வர் விஜயின் கறார் உத்தரவு..!!
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், நிலவேம்பு குடிநீர் மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரைப் பருகுமாறும், குடியிருப்புப் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் தூய்மையைப் பராமரித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் அருண்ராஜ் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 2,500 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்: 3 வாரங்களில் அரசாணை என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!