சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருபத்தெட்டு வயதான அஜித் என்ற இளைஞர் தனது தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தாக்குதலுக்கு உள்ளானார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி தாக்கினர். இந்த தாக்குதலில் அஜித் உயிரிழந்தார். சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது தாய் சரசுவும் வெட்டுக் காயங்களுடன் காயமடைந்தார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த படுகொலை கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியால் நடந்ததாக தெரியவந்துள்ளது.
அஜித் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவர்களில் ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான ராஜேஷ் இன்னும் தப்பியோடிய நிலையில் உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய இருவரும் வாகனத்தில் வந்து உடனடியாக தப்பி ஓடியதாக தகவல் உள்ளது. அஜித்தின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தாய் சரசுவுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார். முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம் என்றும் இனியாவது செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ந்த தலைநகரம்... இளைஞர் உயிரைக் குடித்த ‘கேங் வார்?’... கொடூரமாக வெட்டிக்கொலை...!