கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நேற்று மாலை டியூஷனுக்குச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் வீடு திரும்பாதது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது 12 வயது மகன் சஞ்சய், ஊத்தங்கரை அருகே உள்ள அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற சஞ்சய், மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், வீட்டிலிருந்து டியூஷனுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், அருகிலுள்ள சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!
புகாரின் அடிப்படையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிஃப்ட் கேட்பதும், பின்னர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வதும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 12 வயது சிறுவன் லிஃப்ட் கேட்டுச் சென்றபோது யாரேனும் அவரைக் கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி மாயமான வழக்கில் 12 நாட்களுக்கும் மேலாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது ஊத்தங்கரை அருகே 12 வயது பள்ளி மாணவன் லிஃப்ட் கேட்டுச் சென்ற பின்னர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: "இதான் நிலைமை".! கூட்டணி இல்லையென்றால் திமுக தோல்வி..! அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.!