மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று ஆகஸ்ட் 29, 2026 முதல் கோவை குற்றாலத்திற்குச் செல்ல தற்காலிகத் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை நகரின் மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், போளுவாம்பட்டி வனச்சரக எல்லைக்குள் சாடிவயல் அருகே அமைந்துள்ள இந்த அருவி, சிறுவாணி மலைத்தொடர்களில் உருவாகும் இயற்கை நீர்வீழ்ச்சியாகும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே பசுமையான சூழலில் அமைந்திருக்கும் இந்த இடம், நகரத்தின் பரபரப்பில் இருந்து விடுபட்டு இயற்கையோடு இணைந்து ஓய்வெடுக்க விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து அருவியில் நீராடி மகிழ்வது வழக்கம்.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் போதிய மழை இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கேரளாவிலும் மழை அதிகரித்தது. இதனால் அருவியில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் சூழல் சுற்றுலா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மழை சற்று குறைந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 28 ஆம் தேதி அருவி மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. ஆனால் அன்றிரவு முதல் கோவை மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது.
இதையும் படிங்க: கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்த மழையால் அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.அருவிப் பகுதிக்குச் செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கும் பொருட்டே இந்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே சுற்றுலா அனுமதி மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!