சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்செய்யும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்கும் அனைத்துப் பொது நிகழ்வுகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும். இதன்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை முன்னதாகவே குறித்து அறிவிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் கொள்ளளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சான்றளிக்க வேண்டும். கூட்டங்களுக்கு அனுமதி கோருவோர், நிகழ்ச்சி நடப்பதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை 50,000-க்கும் மேற்பட்டவர்கள் கூடும் மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளாக இருந்தால், 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையில் மிக முக்கியமாக, கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு 100 நபர்களுக்கும் ஒரு தன்னார்வலரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமிக்க வேண்டும். சாலைகளில் நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு ஒரு தன்னார்வலர் இருக்க வேண்டும். குடிநீர், கழிவறை மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்களே உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனி இடவசதி செய்து தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு அந்த இடத்தை பழைய நிலைக்கே சுத்தம் செய்து ஒப்படைக்க வேண்டும் என்பதும் விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம தான் நம்பர் 1..!! வளர்ச்சியில் மகத்தான சாதனை.. மாஸ் காட்டும் தமிழ்நாடு..!!
காவல்துறை தரப்பில், கூட்டத்தின் தன்மையைப் பொறுத்து ‘குறைந்த பாதிப்பு’, ‘மிதமான பாதிப்பு’ மற்றும் ‘அதிதீவிர பாதிப்பு’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்கப்படும். இதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை ஏற்பாட்டாளர்களே வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அடுத்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை நடைமுறைக்குக் கொண்டு வரவும் டிஜிபி-க்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! ₹1082 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. களைகட்டும் ஏற்பாடுகள்!