தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறுபான்மை அரசை அமைத்தது. இந்தப் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பும் முடிவை எடுத்து அறிவித்தது. இது தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் பெரும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதுவரை தமிழக சட்டப்பேரவை கூட்டங்கள் பெரும்பாலும் பாரம்பரிய ஊடகங்கள் வாயிலாகவே பகிரப்பட்டன. சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒளிபரப்பப்பட்டன. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்தே முழு நேரலை ஒளிபரப்பு தொடங்கியது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் சட்டமன்ற நேரலை துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டப்பேரவை நேரலைத் துண்டித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில், தற்போது சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
இதையும் படிங்க: மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!
‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று கூறிவிட்டு, கடந்தகால திமுக ஆட்சியைப் போலவே தங்களுக்குச் சாதகமான மற்றும் தேவையான பகுதிகளை மட்டுமே நேரலை செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையோ அல்லது தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துகளையோ நேரலை செய்யாமல் தவிர்ப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார்.
சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளையும், விவாதங்களையும் நேரடியாகக் காணும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதனைத் தடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலையைத் துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கைக் கைவிட்டு, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசையும், பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!