தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயர் இல்லாமல் வெறுமனே “அரசு போக்குவரத்துக் கழகம்” என்று மட்டும் எழுதப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இது தமிழ் அடையாளத்திற்கு எதிரான செயல் என்று குற்றம் சாட்டி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர்.இந்த சர்ச்சை சமீப காலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டம் நடத்தினர்.
இதனால் சில இடங்களில் போலீசார் அவர்களை கைது செய்தனர். போராட்டக்காரர்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்றவற்றில் அரசு பேருந்துகளில் அந்தந்த மாநிலப் பெயர்கள் பெருமையுடன் இடம்பெற்றிருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்தப் பெயர் தவிர்க்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.சீமான் வெளியிட்ட அறிக்கையில், முன்பு பேருந்துகளில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று முழுமையாக எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது “தமிழ்நாடு” என்ற சொல்லை நீக்கியது ஏன் என்று கேட்டார்.
இது தமிழ்நாட்டின் பெயருக்கு இழுக்கு செய்யும் செயல் என்றும், திமுக அரசு இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையெனில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதே கோரிக்கையை கர்நாடகாவில் வாழும் தமிழர்களும் எழுப்பியிருந்தனர். இருப்பினும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இதற்கு விளக்கமளித்தார். “தமிழ்நாடு” என்ற பெயர் நீக்கப்பட்டது திமுக ஆட்சியில் அல்ல, மாறாக 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது என்றார். அப்போது புதிய பேருந்துகளை துவக்கி வைத்த போதே இந்த மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை... கண்டுகொள்ளாத திமுக... வடமாநில இளைஞர் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்...!
காரணம், பெயரை பெரிதாகவும் தெளிவாகவும் எழுதி பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் வடிவமைத்ததே என்று கூறினார். இது புதிய சர்ச்சை அல்ல, பழையது என்றும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட எதுவும் இல்லாததால் இதை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு ஸ்டிக்கர்களை அவர்களிடமிருந்து வாங்கினர். அப்போது, போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!