மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம் என்பவரது மகள் ஷர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். இன்று காலை வீட்டின் மொட்டை மாடியில் துணிகளை எடுக்கச் சென்றபோது, பக்கத்து வீட்டு மாடியிலிருந்து திடீரெனத் தாவி வந்த வாலிபர் ஒருவரால் அவர் கீழே தள்ளிவிடப்பட்டார். சுமார் இரண்டு மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாணவியின் இடுப்பு எலும்பு உடைந்து, அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சுயநினைவின்றித் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெற்குன்றம் பகுதியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி ஷர்மிளாவை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற வாலிபர் கடந்த சில மாதங்களாக ஒருதலைப் பட்சமாகக் காதலிப்பதாகக் கூறிப் பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவி இதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை மதுபோதையில் இருந்த சிலம்பரசன், மாணவி தனியாக மாடிக்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மாடியில் இருந்து குதித்துத் தப்ப முயன்ற சிலம்பரசனைத் துரத்திப் பிடித்தனர். மதுபோதையில் இருந்த அவரை மக்கள் தர்ம அடி கொடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கிடக்கவே, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “வெற்றியைப் போலவே தோல்வியும் எதார்த்தம்!” – சென்னையில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உருக்கம்!
கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக் காதலால் இளம்பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம், பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்த கேள்வியைப் மீண்டும் எழுப்பியுள்ளது. போதைப் பழக்கமும், எல்லை மீறிய ஒருதலைக் காதலும் ஒரு மாணவியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கோயம்பேடு போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 8-வது நாளாக சென்னையில் வலுக்கும் போராட்டம்! நீதி கேட்ட ஆசிரியர்கள்.. நீளும் வழக்குகள் காவல்துறை அதிரடி!