வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த ஆண்டுக்குள் 3500 கோவில்களில் குடமுழுக்கு.. இது தான் திராவிட மாடல்! மார்தட்டிக் கொள்ளும் சேகர்பாபு!
ராமநாதபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்பவுமே வயசு தடை இல்லைங்க... எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள்!