நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட “ஜனநாயகன்” திரைப்படம் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தான் இதன் மையப் பிரச்சனை. படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்து, டிசம்பர் 18, 2025 அன்று CBFCக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று தணிக்கை குழு படத்தை பார்வையிட்டு, சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கவோ மியூட் செய்யவோ பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் உடனடியாக அந்த மாற்றங்களை செய்து டிசம்பர் 24 அன்று மீண்டும் சமர்ப்பித்தனர்.
இதன்பிறகு U/A சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஒரு புகார் வந்ததாகக் கூறி CBFC படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இந்த புகார் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து வந்தது என்பதும், அது மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறப்பட்டது என்பதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இந்த தாமதம் வேண்டுமென்றே செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் கருதியது. படம் இன்னும் பொதுவெளியில் திரையிடப்படவில்லை என்பதால், வெளியாருக்கு அதன் உள்ளடக்கம் தெரிய வாய்ப்பில்லை என்பது அவர்களின் வாதம். இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர், ஜெ.-வுடன் ஒரு செல்பி..!! AI-ஐ யூஸ் பண்ணி விளையாடும் செல்லூர் ராஜு..!! வைரல் வீடியோ..!!
காங்கிரஸ் கட்சி இதை கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மோடி அரசு தணிக்கை வாரியத்தை ஆயுதமாக பயன்படுத்தி திரைத்துறையை கட்டுப்படுத்த முயல்கிறது என குற்றம்சாட்டினார். பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு பறிப்பதாகவும் அவர் கூறினார். இது தமிழ் திரைத்துறை மீதான தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு பிரதமர் மோடி நெருக்கடி தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மோடி அவ்வாறு செய்ய மாட்டார் என்றும் ஒரு படத்திற்கு தடை விதிப்பதன் மூலம் நெருக்கடி கொடுத்து விட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். விஜய் மட்டுமல்ல யாரையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து கூட்டணிக்குள் சேர்க்க முடியாது என்றும் கூறினார். ஜனநாயகனுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு செல்லூர் ராஜு இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பிளவு..! தேமுதிக எங்க பக்கம் தான்... ராஜேந்திர பாலாஜி கணிப்பு..!