மலைகளின் ராணியாகப் போற்றப்படும் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டியில், பசுமைப் புல்வெளிகள், அடர்ந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்கள் ஆகியவை உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இயற்கையின் அற்புதமான காட்சிகள், மலைகளைத் தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் ஆகியவை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களுக்கு சிறந்த படப்பிடிப்பு இடமாகவும் விளங்கி வருகிறது.
குறிப்பாக, நீலகிரியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு கட்டண அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குநரிடம் அனுமதி பெற்ற பின்னரே படப்பிடிப்பு நடைபெறும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகியவற்றில் படப்பிடிப்புக்கு ரூ.50,000ம், தேயிலை பூங்காவில் ரூ.25,000ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டு மரங்கள், பூத்துக் குலுங்கும் மலர்கள், கண்ணாடி மாளிகை, பசுமையான புல்வெளிகள் ஆகியவை படங்களில் அழகிய காட்சிகளாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன் களைகட்டும். வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா, பல்வேறு கண்காட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!
இந்த கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சினிமா படப்பிடிப்புக்கு நிலையான தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலைப் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் நவநீதா கூறுகையில், “கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். தற்போது நடைபாதையோரங்களிலும், மலர் பாத்திகளிலும் புதிய மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.

இந்த செடிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாது” என்றார்.இந்த தடை உத்தரவு, சுற்றுலாப் பயணிகளின் வசதியையும், பூங்காக்களின் அழகையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!