தமிழ்நாட்டில் மதுபானம் வாங்குவோருக்கு கூடுதல் செலவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தற்போது அமல்படுத்துவதற்கான சட்ட அடித்தளம் உருவாகியுள்ளது. இதையடுத்து டாஸ்மாக் மதுபானங்களின் விலை எதிர்காலத்தில் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம், 2006-ல் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை இந்த வரியை நிர்ணயிக்க முடியும். ஆனால், ரூ.20 என்பது அதிகபட்ச வரம்பு மட்டுமே என்பதால், அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயமாக ரூ.20 வசூலிக்கப்படும் என்று தற்போது கூற முடியாது.
எந்த வகையான மதுபானத்துக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை அரசு தனியாக அறிவிக்க முடியும். பாட்டிலின் அளவு, மதுபானத்தின் வகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெவ்வேறு வரி விகிதங்களை நிர்ணயிக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி திருத்தச் சட்டம் அரசு பதிவுகளிலும் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இனி பாட்டிலுக்கு 20 ரூபாய்... அமலுக்கு வந்தது புதிய சட்டம்... தவெக அரசின் ரூ.1000 கோடி டார்க்கெட்...!
இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய், மதுபான பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், மதுப்பழக்கத்தை கைவிடுவதற்கான திட்டங்கள், அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்ற பணிகளுக்கும் நிதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மதுபானத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட சமூக நலப் பணிகளுக்கும் இந்த வருவாய் பயன்படுத்தப்படலாம்.
இதற்கிடையே, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை செலுத்தியதும் டிஜிட்டல் முறையில் பணத்தைத் திரும்ப வழங்கும் வகையில் 4,000 ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனால், புதிய வரி எப்போது முதல் அமலுக்கு வரும், எந்தெந்த மதுபானங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும், அதன் தாக்கம் சில்லறை விலையில் எப்படி இருக்கும் என்பதே அடுத்த முக்கிய கேள்விகளாக உள்ளன. அரசு வெளியிடும் அறிவிப்புக்குப் பிறகே மதுபானங்களின் விலையில் ஏற்படக்கூடிய உண்மையான மாற்றம் தெளிவாகும்.
இதையும் படிங்க: இனிமே NO TENSION..! டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை... இன்று முதல் அமல்..!!