திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் லட்சுமணன், அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் எனும் இளைஞரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். இந்தத் தாக்குதல் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி நடந்ததது. பணகுடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகனான லட்சுமணன், சபரிராஜனின் வீட்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தகராறில் சபரிராஜன் கோபம் கொண்டு அரிவாளை எடுத்து லட்சுமணனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சபரிராஜன் அப்போது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெறிச்செயலில் லட்சுமணன் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட லட்சுமணன், அப்பகுதி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் தங்குதடையின்றி பரவி வரும் நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டமே இல்லை., இது போதைப்பொருள் இல்லாத மாநிலம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் மார்தட்டிக் கொண்டது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது என்று கூறியுள்ளது. சபாநாயகரின் சொந்தத் தொகுதியிலேயே, ஒரு குக்கிராமத்தில் கூட கஞ்சா புழக்கம் தாராளமாக இருப்பதும், அது ஒரு பள்ளி மாணவனின் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதும் தி.மு.க அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பச்சையப்பாஸ் மாணவனை துடிக்க துடிக்க வெட்டி சாய்த்த கொடூரம்... நந்தனம் காலேஜ் மாணவர்கள் அதிரடி கைது...
உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றும் நாடகத்தை இந்த மக்கள் விரோத அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது என்றும் பொதுமக்களை அலட்சியப்படுத்தியும், தனது சுயநலத்திற்காக ஏமாற்றியும் வரும் தி.மு.க அரசு, மாணவன் லட்சுமணன் உயிரிழப்பிற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இனியாவது போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த விளம்பர அரசியல் செய்யாமல், மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!