2026 சட்டமன்றத் தேர்தலை முழு நோக்கமாக கொண்டு தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தி இருந்தார். சமீபத்தில் மதுரை மாவட்டம் பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜயின் அரசியல் வருகை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சிலரும் நிச்சயம் விஜயகாந்தை போல விஜயின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிலரும் பேசி வருகின்றனர்.
கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரியை திமுக என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். அதிமுக யாருடைய கையில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று பேசிய விஜய் பாஜகவையும் பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்து விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று முற்றிலும் உண்மைக்கு புறமான தகவல் வெளியாகியிருப்பதாகவும், ஆதாரமும், அடிப்படையும் இல்லாத தகவல் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி? சட்டென OPS கொடுத்த ரியாக்ஷன்! தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி...
கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகன் நாடாள துடிக்கிறான்... விஜய் மீது சீமான் மறைமுக தாக்கு! கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்