தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்லும் காட்சிகளைக் காண முடிகிறது. தேனியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வெள்ளிமலை, பொம்மராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாறை, வருசநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்தது.
இதையும் படிங்க: தடை...! தடை...!! தடை...!! - இந்த 3 மாவட்டங்களில் திரும்பிய திசையெல்லாம் கட்டுப்பாடு... என்ன காரணம்?
விடிய விடிய பெய்த மழையின் காரணமாக இன்று காலை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, கடந்த பல மாதங்களாகக் கடமலை-மயிலை ஒன்றியப் பகுதியில் நிலவி வந்த குடிநீர்த் தட்டுப்பாடு முழுமையாக நீங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்களுக்கு மலைப்பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், வைகை ஆற்றின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?... அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு...!