நெல்லையில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை கவிதா சிங் என்பவர் நடத்தி வருகிறார். இவரது மகள் கனிஷ்காவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த பலராம் சிங் என்பவர் உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கனிஷ்கா தனது கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தி தனது இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமையை தன் பெயரில் மாற்றக்கோரி வரதட்சனை கேட்டு தொல்லை செய்வதாக நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் பல்ராம் சிங்கிற்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அவர் ஆஜராகாமல் அவர் தரப்பு வழக்கறிஞர் ராஜராகி 10 நாட்கள் அவகாசம் கேட்டு விண்ணப்பித்தார். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. இது ஒரு புறம் இருக்க தற்பொழுது இருட்டுக்கடையை நிர்வகித்து வரும் கவிதா சிங்கின், சகோதரர் நயன் சிங் என்பவர் சில நாட்களுக்கு முன்பு இருட்டுக்கடை தனக்கு தான் சொந்தம். அதற்கான உயில் தன்னிடம் இருக்கிறது என பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவிதா சிங் தரப்பில், இருட்டுக்கடையை என்னிடமிருந்து அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என அவரும் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் இன்னும் முடிவதற்குள் புதிய சர்ச்சையாக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தேவ்சிங் இப்பொழுது மகன் பிரேம் ஆனந்த் சிங் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில், தொடக்கத்தில் ராம்சிங் கடையை தொடங்கியுள்ளார். ராம் சிங்கிற்கு உதய் சிங், கரண் சிங், கிருஷ்ணா சிங், ஜெகன்சிங் என நான்கு ஆண் மகன்களும், நிமா பாய், தர்மா பாய் என 2 மகள்களும் இருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் அரிசி விற்பனை..! இனி 20% டாக்ஸ்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!
உதய் சிங்கிற்கு பாலாஜி சிங் ஒரே மகன். இந்த பாலாஜி சிங்கிற்கு தேவ் சிங், ஹரி சிங் என இரு ஆண் மகன்கள் இருந்தனர். தேவசிங், ஹரிசிங் இருவரும் காலமாகிய நிலையில் தேவசிங்கின் மகன் பிரேம் ஆனந்த் சிங். ராம் சிங்கின் 2வது மகன் கரன்சிங், 4வது மகன் ஜெகன் சிங் வாரிசுகள் இன்றி காலமாகிவிட்டனர். ராம்சிங்கின் 3வது மகன் கிருஷ்ண சிங் 1900 முதல் கடையை நடத்தி வந்து அதன் பின்னர் அவருடைய மகன் பிஜிலிசிங்கிற்கு கிடைத்தது.

அவர் அரசு அலுவலராக இருந்த காரணத்தினால் அவருடைய மனைவி சுலோச்சனா பாய் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஹரிசிங் என்பவரை மேனேஜராகக் கொண்டு இருட்டுக்கடை நடத்திவரப்பட்டது. பிஜிலி சிங் அவரது மனைவி சுலோச்சனா பாய் ஆகியோருக்கு இருட்டுக்கடை தொடர்பான சொத்துக்களும் பூர்வீக பாத்தியப்பட்ட கூட்டு குடும்ப சொத்துக்களாக இருந்தது. பிரேம் ஆனந்த் சிங், ஹரி சிங் ஆகிய இருவரும் சுலோச்சனா பாய்க்கு எதிராக திருநெல்வேலி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடத்திய போது இந்த உண்மைகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
சுலோச்சனா பாய் உயிருடன் இருந்த போது தங்கள் குடும்பத்தின் சட்டபூர்வமான ஒரே ஆண் வாரிசு என்ற அடிப்படையில் பிரேம் ஆனந்த் சிங்கை அழைத்து தன்னை சுற்றி இருக்கக்கூடிய நபர்களின் சட்ட விரோத செயல்களை எடுத்துக் கூறி அதற்கு உரிய பரிகாரம் தேட கேட்டுள்ளார். இதற்கிடையில் அவர் இறந்துவிட்ட நிலையில் உறவினர்கள் என்ற அடிப்படையில் சரியான ஊதியத்திற்காகவும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த கவிதா சிங், நயன்சிங் இருவரும் இருட்டுக்கடை மற்றும் இதர சொத்துக்களை அபகரிக்க சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள்.

பிரேம் ஆனந்த் சிங்கை தவிர்த்து வேறு எவருக்கும் இருட்டுக்கடை மற்றும் அது தொடர்பான சொத்துக்களை எவ்வித சட்டப்படியான பாதியத்தையும் வாரிசுரிமையும் கிடையாது. சுலோச்சனா பாய் காலத்தில் உதவியாக வேலை பார்த்த ஹரி சிங், கவிதா சிங், நயன்சிங் ஆகியோர் வியாபார வரவு செலவுகளில் தவறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி நபர்களிடமிருந்து சட்டப்படியான நடவடிக்கை மூலம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கவிதா, நயன்சிங் ஆகிய இருவரிடமும் இருட்டுக்கடை தொடர்பாகவோ கூட்டு குடும்ப சொத்துக்கள் தொடர்பாகவும் யாரும் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த இருவரில் நடவடிக்கைகள் சட்டப்படியான இருட்டு கடையில் வாரிசு பிரேம் ஆனந்த் சிங்கை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் இருட்டுக்கடைக்கு நான் தான் உரிமையாளர் என்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்பொழுது மூன்றாவதாக மகன் வழி பேரன் பிரேம் ஆனந்த் சிங் என்பவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இதுக்கும் தடையா..? அடி மேல் அடி கொடுக்கும் இந்தியா.. திணறும் பாகிஸ்தான்..!