ஜெய்ப்பூரில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் சுற்றுப் போட்டியில் ஜெய்ப்பூரில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கலாம் என்கிற நிலையில் பஞ்சாப் களமிறங்கியது. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயஷ், பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரிக்கிள்டன், ரோகித் சர்மா ஜோடி நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. மும்பை அணி பவர் பிளேயில் 5 ஓவரில் 45/0 ரன் எடுத்திருந்தபோது ரிக்கிள்டனை (27 ரன்) யான்சென் வெளியேற்றினார்.

ரன் எடுக்க திணறிய ரோஹித் 21 பந்துகளில் 24 ரன் எடுத்து ஹர்பிரீத் சுழலில் வீழ்ந்தார். திலக் வர்மா (1), வில் ஜாக்ஸ் (17) என அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் சூர்யகுமாரும கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்தனர். ஹர்பிரீத் பந்தை பவுண்டரிக்கு விளாசிய பாண்ட்யா, அர்ஷ்தீப் பந்தில் ஒரு சிக்சருக்கு பறக்கவிட்டார். 15 பந்தில் 26 ரன் எடுத்திருந்தபோது பாண்ட்யாவை யான்சென் காலி செய்தார்.
வைஷாக் வீசிய 19 வது ஓவரின் முதல் இரு பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார் நமன் திர். சூர்யகுமார் தன் பங்கிற்கு 2 பவுண்டரிகள் விளாச, ஒரே ஓவரில் மொத்தம் 23 ரன்கள் கிடைத்தன. சூர்யகுமார் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் நமன் திர் (20 ரன், 12 பந்து), சூர்யகுமார் (57) அவுட்டாகினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்களை மும்பை அணி எடுத்தது.

பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் (13), பிரியான்ஷ் ஆர்யா ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. பின்னர் ஆர்யா, இங்லிஸ் இணை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. பிறகு சான்ட்னர் சுழலில் ஆர்யா (62) அவுட்டானார். மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்லிஸ் 73 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஷ், சான்ட்னர், பவுல்ட் பந்தில் தலா ஒரு சிக்சர் அடிக்க வெற்றி எளிதானது. பஞ்சாப் அணி 18.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயஷ் (26 ரன்), வதேரா (2 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 16 புள்ளிகளுடன் நான்காமிடத்தைப் பிடித்தது. இன்று நடைபெறும் பெங்களூரு - லக்னோ இடையிலான போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தெரிய வரும்.
இதையும் படிங்க: PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!
இதையும் படிங்க: நாங்க ரொம்பவெறுப்புல இருக்கோம்... ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கருத்தால் பரபரப்பு!!