தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்தது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரியில் மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திருப்பதி அருகே நிகழ்ந்த கோர விபத்து.. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மழைக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நீலகிரியில் உதகையில் முன்னெச்சரிகையாக பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கூடலூரில் நேற்று, முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அவைகளை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வரும் ராஜேஷ், விடுமுறை பெற்று நண்பர்கள் ஆண்டோதாமஸ் (53), அருண் தாமஸ் (44), ஆகியோருடன் ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுள்ளார்.
இச்சாலை குறுக்கே செல்லும் பாண்டியார் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். ஆனால் யாரும் வராததால், பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு அப்பகுதிக்கு சென்று, நீண்ட நேரமாக போராடி, ஒருவழியாக அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆனால் காரை மீட்க முடியவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவு..! முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை..!