தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருவதை தற்போது தெளிவாகக் காண முடிகிறது. ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) விருப்ப மனுக்கள் பெறும் பணியை தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், திமுக தலைமைக் கழகமான அறிவாலயத்தை நோக்கி பல்வேறு தரப்பினரும் தேர்தல் சீட் கோரி அணுகும் நிலை ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது.
திமுகவை குறிக்கும் உதயசூரியன் சின்னத்தை ஐந்து விரல்களை விரித்து அடையாளம் காட்டுவது போல், “ஐந்து அஸ்திரங்கள்” அறிவாலயத்தை நோக்கி அரசியல் ரீதியான படையெடுப்பை ஆரம்பித்துள்ளதாக என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அவை யார் யார் என்பதை வரிசையாக பார்க்கலாம்.
வாரிசுகளுக்கு சீட் கேட்கும் சீனியர் அமைச்சர்கள்:
முதலில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் தங்களது அரசியல் வாரிசுகளுக்காக சீட் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில் கடினமான போட்டியிலேயே வெற்றி பெற்றார். அவரின் உடல்நிலை உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு இந்த முறை அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து விவாதம் நிலவுகிறது. இந்நிலையில், அவரது மருமகள் சங்கீதாவுக்கு காட்பாடி தொகுதியில் வாய்ப்பு கோரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “கை” விட்டது காங்கிரஸ்... ராகுலின் கட் அண்ட் ரைட் முடிவு...!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தி, தாம் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் நிலையில், சோளிங்கர் தொகுதியை தனது மகன் வினோத்துக்கு கேட்பதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருக்கோவிலூர் தொகுதியை தனது மகன் கவுதமசிகாமணிக்கு வழங்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாற்றாக, அவர் தொகுதி மாற்றம் செய்து விழுப்புரம் அல்லது விக்ரவாண்டி பகுதிகளில் மகனை நிறுத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தனது மகன் கம்பனுக்கு போளூர் தொகுதியை கோரும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனுக்கு புவனகிரி அல்லது சிதம்பரம் தொகுதிகளில் வாய்ப்பு எதிர்பார்க்கிறார் என தகவல்கள் வெளியாகின்றன.
இதுபோல சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலர் தங்களது வாரிசுகளுக்காக சீட் கோரும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப அரசியல் முன்னேற்றம் காண முயற்சிகள் நடைபெறுவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.
இளைஞரணி கோரிக்கை:
துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இம்முறை இளைஞரணிக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் குறைந்தது 50 முதல் 60 தொகுதிகள் வரை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் இளைஞரணி சார்பில் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை தனித்த அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த கோரிக்கை பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளின் அழுத்தம்:
கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகளை கோரி வருகின்றன. கடந்த தேர்தலில் திமுக சுமார் 173 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இம்முறை கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை எதிர்பார்க்கின்றன. காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்தோர்:
மற்ற கட்சிகளில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த பலரும் தேர்தல் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு சீட் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் சீட் கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிட்டிங் எம்எல்ஏக்களின் கவலை:
இந்த அனைத்து கோரிக்கைகளாலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்கள். வாரிசு அரசியல், இளைஞரணி கோரிக்கைகள், கூட்டணி அழுத்தம் மற்றும் புதியவர்களின் வருகை ஆகியவை காரணமாக தங்களது தொகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவர்களிடம் நிலவுகிறது. இதனால், தாங்கள் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றியுள்ளதை கருத்தில் கொண்டு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “ஆமா... திமுக ஆட்சியில் கடன் அதிகமாகிவிட்டது...”... படுஓபனாக ஒத்துக்கொண்ட பிடிஆர்... அங்க தான் இருக்கு ட்விஸ்ட்டே...!