தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் உள் பிளவு மேலும் ஆழமடைந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியை சரியாக உடைத்து வருகிறது.
இன்று (ஜனவரி 21, 2026) ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ ஆர். வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, மகன் பிரபுவுடன் அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் டெல்டா மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்தவர். ஜெயலலிதா காலத்தில் வீட்டு வசதி, தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.
இதையும் படிங்க: கேம் சேஞ்சர் ஸ்டாலின்!! அதிமுகவை மொத்தமாக வளைத்துப் போடும் திமுக! மாஸ்டர் ப்ளான்!
இதேபோல், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் இன்று ஸ்டாலினை சந்தித்து தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளனர்.
2022-இல் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட இவர்கள், ஓபிஎஸ் அணியின் முக்கிய தூண்களாக இருந்தனர். இந்த இணைப்புகள் ஓபிஎஸ் அணியை கிட்டத்தட்ட சிதைத்துவிட்டன. ஓபிஎஸ் அணியில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) திமுகவில் இணைந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இப்போது வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால், ஓபிஎஸ் அணியில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 2-ஆக சுருங்கியுள்ளது. ஸ்டாலின் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' செய்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்வுகள் அதிமுக - பாஜக கூட்டணியின் திட்டங்களை குலைத்துள்ளன. டெல்லி (பாஜக தலைமை) அதிமுகவை ஒன்றிணைத்து வலுவான எதிர்க்கட்சியாக மாற்றி, 2026 தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள திட்டமிட்டது. அமித் ஷா உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இணைப்புக்கு முயன்றனர்.
ஆனால் ஸ்டாலின் ஓபிஎஸ் அணியை உடைத்ததால், இணைப்பு சாத்தியமற்றதாகிவிட்டது. ஓபிஎஸ் அணி பலவீனமடைந்துள்ள நிலையில், அதிமுகவின் ஒற்றுமை கேள்விக்குறியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு செல்லும் தலைவர்களின் வரிசை நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் முன்னாள் எம்பி மைத்ரேயன், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் போன்றோர் இணைந்தனர். அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகமான அன்வர் ராஜா இணைந்தது பெரும் பின்னடைவு.
திமுக அமைச்சரவையில் முத்துச்சாமி, ரகுபதி, கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எவ.வேலு, பி.கே. சேகர் பாபு போன்றோர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள். செந்தில் பாலாஜி அதிமுக - அமமுக வழியாக திமுகவில் இணைந்தவர்.
அதிமுக வட்டாரங்களில் "இது வெறும் டீசர்தான், மெயின் பிக்சர் இனிதான்" என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலம், சென்னை, டெல்டா ஆகிய இடங்களில் இருந்து இன்னும் 4 மூத்த தலைவர்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"எங்கடா என் டீம்?" என்று எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சி கொத்துக்கொத்தாக உதிர்ந்து வருகிறது. தமிழகத்தில் மழைக்காலம் நடந்தாலும், அதிமுகவுக்கு இது இலையுதிர் காலம் – இரட்டை இலை சின்னத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து திமுகவுக்கு பறக்கின்றன!
திமுக இந்த இணைப்புகளால் டெல்டா, தென் மாவட்டங்களில் வலுப்பெற்றுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி எப்படி சமாளிக்கும்? வரும் நாட்களில் மேலும் அதிரடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: முடிவெடுக்க முடியாம திணறும் ஓபிஎஸ்! நானும் திமுக போறேன்!! குன்னம் ராமச்சந்திரன் கொடுத்த ஷாக்!