சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சாடியுள்ளார்.
கடந்த 6-ஆம் தேதி ஒரு தாக்குதல் வழக்கில் ஆகாஷ் உள்ளிட்ட இருவரை மானாமதுரை காவல்துறையினர் கைது செய்தனர். பிடியிலிருந்து தப்ப முயன்றபோது பாலத்திலிருந்து விழுந்து கால் முறிந்ததாகக் கூறி ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், காவல்துறையினர் ஆகாஷை ரகசிய இடத்தில் வைத்துச் சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உறவினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் போக்குவரத்துப் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டு பிடிப்பு!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் இதுவரை 27 லாக்-கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் புள்ளிவிபரங்களுடன் சாடியுள்ளார். "மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திமுக அரசும் காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது" என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குற்றங்களைத் தடுக்கத் திறனற்ற காவல்துறையினர், மக்கள் செல்வாக்கை இழக்கும் போதெல்லாம் அதைத் திசைதிருப்பக் கைதிகளைச் சுட்டுக் கொல்வது, காலை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்குக் காரணமான காவல்துறையினர் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பொம்மை முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்! சிவகங்கை வன்முறையை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம்!