கீவ்: ரஷ்யா உக்ரைன் மீது புதிய பெரும் தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உடனடியாக வழங்குமாறு சர்வதேச கூட்டாளி நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ஜெலென்ஸ்கி தனது அறிக்கையில், “ரஷ்யர்கள் ஒரு புதிய பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர். இது புடினின் வழக்கமான பாணி. ரஷ்யா மக்களைக் கொல்ல விரும்புகிறது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்கு கீழ்ப்படியுங்கள்” என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “வான் பாதுகாப்புக்கான ஏவுகணைகளை வழங்குவதில் ஏற்படும் எந்தத் தாமதமும் உயிர் இழப்புகளுக்கு வழிவகுக்கும். இது போரைத் தொடர ரஷ்யாவுக்கு ஊக்கம் அளிக்கும். உலகத்திடம் போதுமான அளவு மற்றும் தரமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. உக்ரைன் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க உங்கள் உதவி தேவை” என்றார்.
இதையும் படிங்க: அதிபர் டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு!! ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய முயற்சி!
இந்த உதவி முடிவுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகின் வலிமையான நாடுகளிடமிருந்து வர வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். “முனைப்புடன் செயல்பட்டு உயிர்களைப் பாதுகாக்க ஏவுகணைகளை விரைவாக வழங்குங்கள்” என்று அவர் கோரிக்கை விடுத்தார். உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட ஜெலென்ஸ்கி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யா தரப்பில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைன் தரப்பு வான் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜெலென்ஸ்கியின் இந்த அவசர வேண்டுகோள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மக்களின் உயிர் பாதுகாப்புக்கு உலக நாடுகள் எந்த அளவுக்கு உதவும் என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலைமை அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: 2 நாட்டு அதிபர்கள் மீண்டும் பேச்சு! உக்ரைன் போரை முடிப்பது குறித்து 1.30 மணி நேரம் உரையாடல்!