தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். 2017-ல் வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திய இவர், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என விறுவிறுப்பான ஹிட் படங்களை இயக்கி வந்துள்ளார். தனது படங்களில் மட்டும் இல்லை, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற தனி பிரபஞ்சத்தை உருவாக்கி, அதனை விரிவடையச் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’ உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளார்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்த படத்தின் இசையை அனிருத் அமைத்துள்ளார். அமீர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ், பகத் பாசில், சுருதிஹாசன், சபின் ஷாஹிர், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இயக்குநராக மட்டும் அல்லாது, தற்போது நடிப்பிலும் கால் பதிக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்பதே தற்போதைய சூடான அப்டேட். அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அதில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத போதும், சினிமா வட்டாரங்களில் இது குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக முதலில் லோகேஷ் கனகராஜை அணுகியிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதை லோகேஷே நேர்காணலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதன்படி அவர் பேசுகையில் "பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க என்னை இயக்குநரும், சிவகார்த்திகேயனும் கேட்டார்கள். கதையும் எனக்குப் பிடித்தது. சிவகார்த்திகேயன் சொல்லும் போதே, ‘நீங்க நடிச்சா நன்றாக இருக்கும்’ என்றார். ஆனால், நான் அப்போது ‘கூலி’ பட வேலைகளில் முழுமையாக மூழ்கி இருந்தேன். அப்படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தாலும், கூலி பாதிக்கப்படக்கூடாது என்பதால், அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்" என்றார்.
இதையும் படிங்க: ‘கிங்டம்’ திரைப்படத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டம்..! தியேட்டர் முற்றுகையால் பரபரப்பு..!
இதைத் தவிர, ‘ஜிஸ்குவாட்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, புதுமுகங்களை அறிமுகம் செய்து வெற்றிகரமாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம், அவர் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் ஒரு பொறுப்புடைய பங்கு வகிக்கிறார். லோகேஷ் கனகராஜ், தனது இயக்கத்தின் மூலம் பல சாதனைகளை படைத்திருக்க, இப்போது நடிப்பிலும் களமிறங்க உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடித்திருக்கலாம் என்ற வாய்ப்பை கூலி பணிக்காக விட்டுக் கொடுத்துள்ள லோகேஷ், சினிமாவிற்கான தனது பொறுப்புணர்வையும், தெளிவான முன்னுரிமைப் பட்டியலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்போது கேள்வி என்னெவெனில் இனி வரும் காலங்களில் லோகேஷ் இயக்குநராக மட்டும் இருக்கப் போகிறாரா? அல்லது அடுத்த ஹீரோவா மாறப்போகிறாரா? என்பது தான்.. இந்தக் கேள்விக்கு பதில் வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வந்துவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படிங்க: சொந்த ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாக கும்மியடித்த நடிகர் சூரி..! வைரலான வீடியோ..!