தெலுங்குத் திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனிச் சிறப்பைப் பெற்றிருப்பவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேடு, லைகா’ போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தற்போது "கிங்டம்" எனும் புதிய திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் அதிரடியாக வருகிறார். இத்திரைப்படத்தை கவுதம் தின்னூரி இயக்கியுள்ளார். முக்கிய நடிகையாக பாக்யஸ்ரீ போர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜூலை 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் சென்னையில் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இயக்குநர் கவுதம் தின்னூரி, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் முன் மிகவும் உணர்வு பூர்வமாக பேசிய விஜய் தேவரகொண்டா, தமிழ் ரசிகர்களிடம் தனக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி, தனது அனுபவங்களையும், உழைப்பையும் குறித்து வெகுவாக பகிர்ந்தார். அதன்படி விஜய் தேவர்கொண்டா பேசுகையில், " என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ் நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31ல் வெளியாகிறது. ஆரம்பத்திலேயே தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே இந்த படம் உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தோம், ஆகவே இந்தப் படம் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.

இதில் வரும் இடங்களும், மக்கள் கலாசாரமும் ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டவை. அதனால் இது ஒரு பரந்த உணர்ச்சி அனுபவமாகும். படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஓர் இனிமையான முயற்சி. ரஜினிகாந்த் சார் படங்களைப் போலவே ஒரு சூழலை இப்படம் உருவாக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் டீசருக்காக சூர்யா அண்ணா குரல் கொடுத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்காக அவருக்கு என் நன்றி. அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும், பின்னணி இசையிலும் ஒரு தனி திகைப்பும், ஆழமும் இருக்கிறது. மேலும் இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். என் தலையில் இருந்த மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் ஒரு பெரிய மாற்றம்.
இதையும் படிங்க: 40-வது வயதில் இரட்டை குழந்தை..! திருமணம் செய்யாமல் தாயான நடிகை பாவனா ராமண்ணா..!
அந்த மாற்றத்திற்கான தயாரிப்புகள் எளிதானவை அல்ல. ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன்" என்று கூறினார். அவரது இந்த வார்த்தைகள், கிங்டம் திரைப்படத்திற்கு அவர் செலுத்திய அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் அளவை வெளிப்படுத்துகின்றன. இந்த தயாரிப்புக்காக அவர் தனது வெளிப்புற தோற்றத்தையே மாற்றிக் கொண்டிருப்பது, கதாபாத்திரத்தின் மீதுள்ள ஈடுபாட்டையும், ரசிகர்களிடம் மிகச்சிறந்த ஒரு கதையை வழங்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. அதோடு கிங்டம் திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதால், இந்திய அளவில் ஒரு பெரிய ரிலீஸ் ஆக பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் நடிகர்களின் பேச்சுகள்என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் ஹைப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள், அவரை ஒரு முறை மீண்டும் மெச்மரைசிங் ஹீரோவாக திரையில் காண ஆவலாக காத்திருக்கின்றனர்.

"கிங்டம்" என்பது சாதாரணமான அதிரடி திரைப்படமல்ல; அது உணர்வுகளும், பாசமும், ஆழமும்கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி, இந்திய சினிமாவின் புதிய பரிமாணமாக வலியுறுத்தப்படுகிறது. மொத்தத்தில் விஜய் தேவர் கொண்டாவின் இந்த முயற்சி, அவர் ரசிகர்களிடமுள்ள அன்பையும், திரைப்படத்துறையை ஒரு மேடையாக பார்க்கும் பார்வையையும் பிரதிபலிக்கிறது. ஜூலை 31 அன்று திரைக்கு வரும் ‘கிங்டம்’, உண்மையாகவே ரசிகர்களை ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: கோபத்தில் என் மனைவியை அடித்து விட்டேன்..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் பரபரப்பு..!