திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் உச்சக்கட்ட நிகழ்வாக இன்று மாலை தங்க கருட சேவை நடைபெறவுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் இந்த சேவை இரவு முழுவதும் நீடிக்கும்.
அக்டோபர் 12ம் தேதி முதல் தொடங்கிய நவராத்திரி பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி சக்கர ஸ்நானத்துடன் நிறைவடையும். இந்த ஆண்டு அதிக மாதம் வந்ததால் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. முந்தைய சாலக்கட்டு பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், தற்போது நடைபெறும் நவராத்திரி விழாவில் கொடியேற்றம் இல்லாமல், தங்க ரதம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கருட சேவை இந்த விழாவின் மிக முக்கியமான மற்றும் பெரும் கூட்டம் கூடும் நிகழ்வாகும். கருடன் பெருமாளின் பிரியமான வாகனம் என்பதால், இந்த சேவையைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிந்தா.. கோவிந்தா..!! திருப்பதியில் நாளை கருடசேவை..!! பிரம்மோற்சவ சிறப்பு..!!
பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தனியார் வாகனங்கள் திருமலை மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு குறிப்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பைக்குகளை பாலாஜி இணைப்பு பஸ் நிலையம், நேரு நகராட்சி வளாகம், எஸ்.வி. மருத்துவக் கல்லூரி மற்றும் இஸ்கான் மைதானங்களில் நிறுத்தலாம்.

தனியார் பேருந்துகள் ஜி.பார்க் சாலையில் உள்ள தேவலோக், டிரைடென்ட், மாம்பழ சந்தை ஆகிய இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்கள் மலைக்கு இயக்கப்படுகின்றன. பக்தர்கள் தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் சிரமம் இருக்காது என அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
நேற்று மட்டும் 72,337 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,548 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.87 கோடி வசூலானது. சுமார் 4 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் 18 மணி நேரம் காத்திருந்தனர். இந்த கூட்ட நெரிசலிலும் அமைதியான தரிசனத்திற்கு TTD மற்றும் போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கருட சேவையின் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்ந்து, பக்தர்கள் ஒழுங்குடன் செயல்பட்டு, சுவாமியின் அருளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!