2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று ஜெர்மன் சென்றடைந்தார். டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மன் நாட்டு அரசு அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் மற்றும் ஜெர்மனி வாழ் தமிழ் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் அயலக தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டு தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். தமிழ்நாட்டுக்கு வாருங்கள், தமிழக அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை காணுங்கள். உங்கள் சகோதரன் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்தார்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டசெல்டோர்ஃபில் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டிற்குதலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ரயில் கதவுகள், பிரேக்குகள் தயாரிக்கும் நார்-ப்ரீம்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலைக்கு டர்பைன் தயாரிக்கும் நார்டெக்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இதன் மூலமாக 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
திறன்மிகு மின் மோட்டார்கள் தயாரிக்கும் இபிஎம் பாஸ்ட் நிறுவனம் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது. 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.