அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தீவிர பிரசாரம் செய்தார். டிரம்ப் வெற்றிக்காக நிதியை தாராளமாக அள்ளி கொடுத்தார். இதற்கு கைமாறாக டிரம்ப் அதிபரானதும், அரசு செலவுகளை கட்டுப்படுத்த அரசு செயல் திறன் துறையை உருவாக்கி எலான் மஸ்கை அதன் தலைவராக்கி அழகு பார்த்தார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த போதுதான், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
டிரம்ப் கொண்டு வந்த வரி விதிப்பு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தார். 'இந்த மசோதா அமெரிக்காவை 'போர்க்கி பிக் கட்சி' எனப்படும் ஒற்றைக் கட்சி நாடாக மாற்றுகிறது.
இந்த மசோதா நிறைவேறினால் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி தேவை' என்று தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார். பதிலுக்கு டிரம்பும் கடுமையாக பேசியதால் இவர்களது சண்டை வெளிச்சத்துக்கு வந்தது. மோதலின் உச்சமாக டோக் துறையின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிய எலான் மஸ்க், தனி கட்சி துவங்க ஆர்வம் காட்டினார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி.. எலான் மஸ்கை தொடர்ந்து ஒபாமா செய்த தரமான செய்கை..!

இதற்கிடையே புதிய வரி விதிப்பு மசோதா செனட் சபையில் நிறைவேறியது. அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப், எலான் மஸ்க்கையும் புகழ்ந்து பேசினார். இதனால் இருவருக்குமான உறவு மீண்டும் மலரலாம் என பேசப்பட்டது. ஆனால் வரி விதிப்பு மசோதாவுக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். வரலாற்றில் மிக பெரிய கடன் அதிகரிப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கும்.
பைத்தியக்காரத்தனமான இந்த மசோதா நிறைவேறினால் புதிய கட்சியை தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால், கோபடைந்த டிரம்ப், எலானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிபர் பதவிக்கு என்னை வலுவாக ஆதரிப்பதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே, நான் மின்சார வாகன அவசியத்தை எதிர்க்கிறேன் என்பது எலான் மஸ்குக்கு தெரியும். மின்சார கார்கள் பரவாயில்லை. ஆனால், அனைவரும் ஒன்றாவது வைத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.

வரலாற்றிலேயே இதுவரை யாரும் அனுபவிக்காத அதிகளவிலான வரிச்சலுகையை எலான் அனுபவித்துள்ளார். இந்த மாதிரியான வரிச்சலுகைகள் இல்லாவிட்டால், எலான் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என பகீரங்க மிரட்டல் விடுத்தார்.
இதற்கெல்லாம் சற்றும் சலனப்படாத எலான் மஸ்க், தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: இன்று அமெரிக்கக் கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
''மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது'' என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்.. எலான் மஸ்க் சிறந்த மனிதர்; புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்..!