வளைகுடா போரின் முதல் நாளான பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அந்தச் சம்பவங்களில் அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பால் நியமிக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரே தாய்வே தொடக்கப் பள்ளியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 120 குழந்தைகள் உட்பட 160க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்குப் பிறகு.. வட்டி விகிதம் உயர்வு!! மத்திய வங்கி முடிவை எதிர்க்கும் டிரம்ப்!!
இந்தப் பள்ளி பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. குழு தெரிவித்திருந்தது.
அதே நாளில், லாமட் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த இரு தாக்குதல்களும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் என ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஈரானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அதிகாரிகள் ஒடுக்கிய விதம் குறித்தும் ஐ.நா. குழு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் இணையத் தடைகள் போன்றவை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, போராட்டங்களில் 338 பேர் உயிரிழந்ததாகவும், 25,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இவ்வாறு, தங்களது சொந்த அரசாங்கத்தால் இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கும் இடையே பொதுமக்கள் சிக்கித் தவிப்பதாகவும், உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஈரானில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையால் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு வங்கதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சாரா உசைன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: “எரியுதுடி மாலா...” - ஈரானுக்கு இந்தியாவில் ரத்ன கம்பள வரவேற்பு... உச்சக்கட்ட வயிற்றெரிச்சலில் டிரம்ப்...!