அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் உண்டியல்களில் செலுத்திய பணமும், நகைகளும் அதிக அளவில் சேர்ந்தன. இந்த தொகைகளை எண்ணி வங்கிகளில் செலுத்தும் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் மற்றும் சில மேற்பார்வையாளர்கள் மீது சந்தேகம் எழுந்தது.ஜூன் 2026 தொடக்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக குற்றம்சாட்டினர்.
ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளை இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசிடம் சிறப்பு விசாரணைக் குழு அமைக்குமாறு கோரியது. அதன்படி ஜூன் 13ஆம் தேதி லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமையில் மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கண்காணிப்பு கேமரா காட்சிகள், கணக்குப் பதிவுகள், சாட்சியங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தது.கேமரா காட்சிகளில் பணம் எண்ணும் அறையில் ஊழியர்கள் நாணயங்களை ஆடைகளுக்குள், பாக்கெட்டுகளுக்குள், காலணிகளுக்குள் மறைத்து எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. ஆரம்பத்தில் சுமார் 70 முறை இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் மேலும் ஆய்வு செய்தபோது 105 முறை அனுமதியின்றி பணம் எடுக்கப்பட்ட சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பணம் எண்ணும்போது பாதுகாப்புப் பணியாளர் இல்லாதது, உடல் சோதனை செய்யாதது, கேமரா காட்சிகளை 180 நாள்களுக்குப் பதிலாக 45 நாள்கள் மட்டுமே வைத்திருந்தது போன்ற குறைபாடுகள் வெளிப்பட்டன.ஜூன் 25ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, ராமசங்கர் யாதவ் என்கிற டின்னு யாதவ் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நன்கொடை எண்ணும் பணியில் தொடர்புடையவர்கள். டின்னு யாதவ் முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராயின் ஓட்டுநராக இருந்தவர். அவருக்கு உண்டியல் சாவிகள் இருந்ததாகவும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சில வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டன.இந்த விவகாரத்தில் அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகினர்.
இதையும் படிங்க: கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!
அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டு இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த நன்கொடைத் தொகையில் பெரிய முறைகேடு இல்லை என்றும், உண்டியல் பணத்தை கைகளால் எண்ணும் மையத்தில் மட்டும் திருட்டு நடந்ததாகவும் தணிக்கை ஆய்வில் தெரியவந்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றம் மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்தது. செப்டம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 105 திருட்டு சம்பவங்கள் கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை கிட்டத்தட்ட முடிவுற்றதாகவும், முதல் கைது செய்த நாளிலிருந்து 90 நாள்கள் அவகாசம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையின் நகலை உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!