நேபாளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 100 ரூபாய்க்கு மேற்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விரைவில் நீக்கப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்த புதிய மாற்றத்தைத் தொடர்ந்து, நேபாள ராஷ்ட்ர வங்கி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
2016ஆம் ஆண்டு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, போலி நோட்டுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேபாளம் இந்தத் தடையை விதித்தது.
இதனால் இந்திய சுற்றுலா பயணிகள், நேபாள தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பலரும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். எல்லைப் பகுதிகளில் பரிவர்த்தனை கடினமாகியது. பலர் தவறுதலாக உயர் மதிப்பு நோட்டுகளை எடுத்துச் சென்றதால் அபராதம் அல்லது கைது வரை நேரிட்டது.
இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் விவசாயிகள்..! நாடு போற்றும் நல்லாட்சி? நல்லாருக்கு லட்சணம்.. நயினார் விமர்சனம்...!

இந்தத் தடையை நீக்க வேண்டும் என நேபாள சுற்றுலாத் துறையினர், தொழிலதிபர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்திய ரிசர்வ் வங்கியும் நேபாள ராஷ்ட்ர வங்கியும் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டது.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு நபர் 25,000 ரூபாய் வரை உயர் மதிப்பு (100 ரூபாய்க்கு மேற்பட்ட) இந்திய நோட்டுகளை நேபாளத்துக்கு எடுத்துச் செல்லலாம் அல்லது திரும்ப கொண்டு வரலாம். 100 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
நேபாள ராஷ்ட்ர வங்கி இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசிதழில் விரைவில் வெளியிட உள்ளது. இதன்பிறகு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.
இந்த மாற்றம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும். நேபாளத்தின் சுற்றுலாத் துறை, எல்லை வர்த்தகம், இந்தியாவில் பணியாற்றும் நேபாள தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம் ஆகியவை பெரிதும் பயனடையும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளத்தால் சிதைந்த இந்தோனேசியா..!! 1000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!