சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசு இந்த ஆண்டு மார்ச் 31-ஐ இறுதி காலக்கெடுவாக நிர்ணயித்துள்ள நிலையில், பாதுகாப்பு படைகளின் தீவிர நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பதுங்கு இடங்களை கண்டறிந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதோடு, சரணடையும் நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டமும் வலுவாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில், இன்று (பிப்ரவரி 17) சுப்மா மாவட்டத்தில் ஒரு பெண் உட்பட 22 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் இயக்கத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!! நக்சலைட் 3 பேர் சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!
சரணடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் மறுவாழ்வு கொள்கையின்படி, வேலைவாய்ப்பு, கல்வி, குடும்பத்துடன் இணைத்தல் உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

நக்சலைட்டுகளின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 1,500க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க மார்ச் 31-ஐ இறுதி தேதியாக அறிவித்த பிறகு, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு படைகள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்தும் சிறப்பு நடவடிக்கைகளால் நக்சலைட்டுகள் பல இடங்களில் சரணடைந்து வருகின்றனர்.
சரணடைப்பு நிகழ்வுகள் அதிகரிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நக்சல் பாதிப்பு குறைந்து வருவதால், அந்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 31க்குள் நக்சல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு. இதனால் சரணடைப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!! நக்சலைட் 3 பேர் சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!