நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், தேசிய அரசியல் மட்டுமின்றி தமிழக அரசியலும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய விவாதமாக மாறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் மாறியுள்ள அரசியல் கூட்டணிகள் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான புதிய மோதல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிரொலிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது திமுக எம்.பி.க்களில் குறைந்தது மூன்று பேர் எப்போதும் அவையில் இருக்க வேண்டும் என கட்சித் தலைமையிலிருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்களவையில் காங்கிரஸ் தரப்பில் திமுகவை விமர்சிக்கும் வகையில் ஏதேனும் கருத்துகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு உடனடியாக பதிலளிக்க திமுக எம்.பி.க்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையிலும் தமிழக அரசியல் சூடு பிடிக்கலாம் என கூறப்படுகிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்காக 10-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை ஏற்கனவே வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில், சில விவகாரங்களில் திமுகவும் தனது நிலைப்பாட்டை வலுவாக பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், அந்தக் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படலாம் என்ற அரசியல் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழக ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டவருமான பிரவீன் சக்கரவர்த்தி, இந்த கூட்டத்தொடரில் முக்கிய பங்கு வகிக்கலாம் என கூறப்படுகிறது. அவர் முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், திமுகவை எதிர்த்து வலுவான கருத்துகளை முன்வைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மேலும், “ஆகஸ்ட் மாதத்தில் திமுகவுக்கு எதிராக பெரிய அரசியல் வெடிப்பை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்துவேன்” என பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழக அரசியல் தொடர்பான விவாதங்கள் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு துணை பிரதமர் பதவி..? மத்திய அமைச்சரவையில் வரும் அதிரடி மாற்றம்.!