நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தில் ஒரு டிக்டாக் வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை வன்முறையாக வெடித்து, மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய-நேபாள எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனுஷா மாவட்டம், கமலா நகராட்சியைச் சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி ஆகிய இரு இளைஞர்கள் டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோவில் ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வீடியோ வைரலானதும், உள்ளூர் மக்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சில மணி நேரங்களிலேயே கமலா நகராட்சியின் சகுவா மாரன் பகுதியில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டது. குரான் நூல்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷா மற்றும் அருகிலுள்ள பர்சா மாவட்டங்களில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இதையும் படிங்க: 18ஆம் படியேற 10 மணி நேரம் காத்திருப்பு!! சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்!!
பர்சா மாவட்டத்தின் பிர்குஞ்ச் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் இறங்கி டயர்களை எரித்தனர். சாலை மறியல் நடத்தியும், கற்களை வீசியும் போராட்டம் நடத்தினர். உள்ளூர் போலீஸ் நிலையத்தை சூறையாட முயன்றதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
Muslims throwing flowers on Hindus.
📍Birgunj, Nepal pic.twitter.com/CTYilJ8SId
— Kreately.in (@KreatelyMedia) January 6, 2026
பதற்றம் தொடர்வதால் பிர்குஞ்ச் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாள போலீசார் மசூதி சேதப்படுத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த வன்முறை இந்திய எல்லைப்பகுதிகளையும் பாதித்துள்ளது. பிர்குஞ்ச் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மோசமடைந்ததால், இந்தியா-நேபாள எல்லை தற்காலிகமாக மூடப்பட்டது. சஷாஸ்திர சீமாபால் படை எல்லையை முழுமையாக சீல் வைத்துள்ளது. மைத்ரி பாலம் உள்ளிட்ட முக்கிய எல்லை கடப்பு பகுதிகளில் கடும் சோதனை நடைபெறுகிறது.
மைத்ரி பாலம், சஹாதேவா, மஹாதேவா, பன்டோகா, சிவான்தோலா, முஷர்வா போன்ற எல்லைப்பகுதிகளில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைகளைத் தவிர மற்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தில் பதற்றம் நீடிப்பதால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேபாளத்தின் மதேஷ் பகுதியில் சமூக அமைதியை பாதித்துள்ளது. அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்... பாமக சார்பில் போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் பெற ராமதாஸ் முடிவு... முக்கிய அறிவிப்பு...!